ஹெலிகாப்டர் பின்னணியில் திருமண விருப்பத்தை தெரிவித்த ராணுவ அதிகாரியால் சர்ச்சை
பயிற்சி மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ ஹெலிகாப்டர் முன்பு நின்று தனது காதலியிடம் இளம் ராணுவ அதிகாரி ஒருவர் தனது திருமண விருப்பத்தைத் தெரிவித்தது சர்ச்சையாகி உள்ளது.
மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் ராணுவப் பயிற்சி மையம் உள்ளது. அங்கு பயிற்சியில் தேர்ச்சி பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கான நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது. இதில், இளம் அதிகாரிகளின் குடும்பத்தாரும் பங்கேற்றனர்.
அங்கு பயிற்சியை நிறைவுசெய்த இளம் இராணுவ அதிகாரி பரத்வாஜ், விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் தனது காதலியை அங்கு நிறுத்தப்பட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் அருகே அழைத்துச் சென்று, மண்டியிட்டு மோதிரத்தை நீட்டி தனது திருமண விருப்பத்தை வெளியிட்டார்.
இது தொடர்பான புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, சர்ச்சை எழுந்துள்ளது.
அந்த இளம் அதிகாரி தனது காதலை அழகாக வெளிப்படுத்தியதாக ஒருதரப்பினரும், இச்சம்பவம் ராணுவ ஒழுக்கம், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரானது என மற்றொரு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற புகைப்படங்களை ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பதற்கான விளம்பரங்களில் பயன்படுத்தலாம் என்றும் இத்தகைய படங்கள் இளையர்கள் மனதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.
