வெல்லவாயா சுகாதார அலுவலக சேவைகளுக்குப் பாராட்டு!

வெல்லவாயா சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக சேவைகளை சுகாதார,வெகுஜன ஊடக அமைச்சர் பாராட்டினார்

சுகாதாரம்,வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மொனராகல மாவட்டத்தில் உள்ள வெல்லவாயா சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு (MOH – Wellawaya) சமீபத்தில் ஒரு விசேட ஆய்வு விஜயத்தை மேற்கொண்டார்.

அமைச்சர், வெல்லவாயா சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் (MOH – Wellawaya) அதன் ஒவ்வொரு பிரிவினாலும் வழங்கப்படும் சேவைகள் குறித்தும் அங்குக் காணப்படும குறைபாடுகள் குறித்தும் சுகாதார அதிகாரி எஸ். எச். பியசுமன, அங்குப் பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

சுகாதார அதிகாரி பியசுமன, தாய் , குழந்தை நலன், ஊட்டச்சத்து, உணவு, சுற்றுச்சூழல் நலன், தொற்றா நோய் கட்டுப்பாடு,விசர் நாய்க்கடி கட்டுப்பாடு, பல் நலன், பாடசாலை சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட சுகாதார மேம்பாடு,சமூக சேவைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், அவ்வப்போது எழும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம், அப்பகுதியில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், முப்படைகள் மற்றும் காவல்துறையுடன் இணைந்து, அப்பகுதியில் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஆண்டுக்கு இருமுறை மேற்கொள்ளும் விசேட வீடு மற்றும் வளாக ஆய்வுத் திட்டம் குறித்த தகவல்களை அமைச்சரிடம் சமர்ப்பித்தது.

சம்பந்தப்பட்ட பகுதியில் ஏறத்தாழ இருபதாயிரம் வீடுகளும் வளாகங்களும் உள்ளன என்றும், இந்த வீடுகள் மற்றும் வளாகங்கள் அனைத்தையும் ஒரே நாளில் மூன்று மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து, தேவையான சுகாதார ஆலோசனைகளை வழங்கும் சிறப்பு செயல்முறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.