கோட்டாவின் வழக்கு மார்ச் 5 இல் விசாரணை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைதுசெய்யப்படுவதைத் தடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் 2027 மார்ச் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வழக்கை அழைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (25) மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

அங்கு முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதியரசர்கள் குழாம், இந்த மேன்முறையீட்டு மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காகத் திகதி நிர்ணயித்தது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.