2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பகுதியில் இன்று (15.05.2026) உணர்வுபூர்வமான நினைவேந்தல் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, தாயக மண்ணில் தமது உயிர்களைத் தியாகம் செய்த உறவுகளையும், பொதுமக்களையும் நினைவுகூர்ந்து, அவர்களுக்குத் தார்மீக அஞ்சலியைச் செலுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு முன்பாகவுள்ள மாரியம்மன் ஆலய முன்றலில் இவ்வேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
“எங்கள் நினைவு எங்கள் உறுதி… எங்கள் மக்கள் எங்கள் இதயம்…” எனும் உணர்ச்சிகரமான தொனிப்பொருளில் இந்த நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் தலைமையில் நடைபெற்றது.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், போரதீவுப்பற்று பிரதேச சபைன் உப தவிசாளர் த. கயசீலன், ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவர் நா. நகுலேஸ், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் பிரத்தியேக செயலாளர் திலஷ்சன், பிரதேச சபையின் இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் வெல்லாவெளி வட்டார அமைப்பாளர் பெ. பிரதீப்குமார்,பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

இறுதி யுத்தத்தின்போது, உணவும் நீருமின்றி கொடிய யுத்தச் சூழலில் அகப்பட்ட பொதுமக்கள், உயிர்வாழ ஆதாரமாக அமைந்த “உப்புக்கஞ்சி” நினைவாக, இன்றைய நிகழ்விலும் கஞ்சி காய்ச்சப்பட்டது.
வீதியால் சென்ற பொதுமக்களுக்கு இந்தக் கஞ்சி வழங்கப்பட்டு, அந்தத் துயரம் தோய்ந்த நாள்கள் நினைவுகூரப்பட்டன.
சா. நடனசபேசன்
