ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mikhail Murashko) உள்ளிட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (03) இலங்கை வருகின்றனர்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் சுகாதார,ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுகாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ரஷ்ய அமைச்சர் விசேட கலந்துரையாடல்களை நடத்துகிறார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு,சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தையும் இக்குழுவினர் சந்திக்கின்றனர்.
மே 04-ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றுக்கு இத்தூதுக்குழுவினர் விஜயம் செய்கின்றனர்.
இலங்கை,ரஷ்யாவின் சுகாதார அமைச்சுகளுக்கு இடையே புரிந்துணர்வு உடன்படிக்கைகளை எட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மருந்துகள்,மருத்துவ உபகரணங்கள், மருத்துவ நிபுணர்களுக்கான பயிற்சிகள், கல்விசார் ஒத்துழைப்புகள் (மாணவர் பரிமாற்றம், கூட்டுப் பாடநெறிகள்), ஆயுர்வேத மருத்துவத் துறை,சுற்றுலா சுகாதார சேவை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
ரஷ்ய சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் தமது மூன்று நாள் விஜயத்தை நிறைவு செய்து கொண்டு, வரும் 5-ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படுகின்றனர்.
