மேற்காசியாவில் உள்ள அமெரிக்கத் தளங்களில் வெறும் காகிதப் புலிகளே உள்ளதாக ஈரானிய அதியுயர் தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படையினரால் அவர்களையே காப்பாற்றிக்கொள்ள முடியாது என்றும் மொஜ்தபா தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் ஈரானின் போர் நிறுத்த யோசனைகள் ஏற்கத்தக்கவை அல்லவென்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தாக்குதல் நடத்தின. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல் 8-ஆம் திகதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.
எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் கூடியது.
இந்த நிலையில், ஈரான் உயர் தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவொன்றில், மேற்காசியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் வெறும் காகித புலிகள். அவர்களால், அவர்களை கூட காப்பாற்றி கொள்ள முடியவில்லை என தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க தாக்குதலின்போது, அதற்கு ஆதரவாக செயல்பட்ட இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளை நேரிடையாக குறிக்கும் வகையிலும் அவர் இதனை குறிப்பிட்டு உள்ளார்.
ஈரான் நடத்திய தாக்குதலின்போது, பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் இலக்காக கொள்ளப்பட்டன. அவற்றின் மீது ரொக்கெட்டுகள், ட்ரோன்கள், ஏவுகணைகள் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதேபோன்று மற்றொரு பதிவில், பாரசீக வளைகுடா வெறும் கடல் நீர் என்றில்லாமல், எங்களுடைய அடையாளம் மற்றும் நாகரீகம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக அது உள்ளது. நாடுகளுக்கு இடையே இணைப்பு புள்ளியாக இருப்பதுடன், உலகளாவிய பொருளாதாரத்திற்கான முக்கிய வழியாகவும் அது உள்ளது என தெரிவித்து உள்ளார்.
