தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு இன்று வியாழக்கிழமை (ஏப். 23) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 5.73 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதில், 14 லட்சம் போ் முதல் முறை வாக்காளா்கள்; 3.98 லட்சம் போ் 85 வயதைக் கடந்தவா்கள்.
மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
தமிழக பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாதக, தவெக ஆகிய நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
தோ்தல் தேதி கடந்த மாா்ச் 15-இல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றுவந்த தீவிர தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 20) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
வெளி தொகுதிகளில் வந்து பிரசாரம் செய்தவா்கள் தொகுதிகளைவிட்டு வெளியேற வேண்டும் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை தோ்தல் ஆணையம் விதித்தது.
இதையடுத்து, வாக்குப் பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிா, வாக்காளா்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெறுகிா என தோ்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
