சென்னை: தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர் தாக்கல் செய்துள்ள சொத்துப் பட்டியல் பெரும் விவாதத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினிடம் பத்தாயிரம் ரொக்கம் உள்ள அதேநேரம், நடிகர் விஜய்யிடம் 519 கோடி சொத்து உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று (30) 47 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், அவரது கட்சியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அதிமுகவில் அசோக் உள்ளிட்டவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
துறைமுகம், ஆயிரம் விளக்கு தொகுதியில் யாரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவில்லை.
வில்லிவாக்கம் தொகுதியில் இரண்டு சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதில் வில்லிவாக்கம் திருமலை நகரைச் சேர்ந்த 60 வயதான கந்தசாமி, மனுத்தாக்கலின் போது வைப்புத் தொகையான ரூ.10,000-ஐ, சில்லறையாக அதிகாரிகளிடம் வழங்கினார். அவர் கொடுத்த ரூ.2, ரூ.10, ரூ.20 சில்லறைக் குவியலைக் கண்டு அதிகாரிகள் திகைத்துப் போயினர்.
பின்னர் அவற்றை எண்ணுவதற்கு நீண்ட நேரமானதால், அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 011ஆம் ஆண்டு முதல் தவறாமல் அனைத்துச் சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களிலும் சுயேச்சையாகப் போட்டியிட்டு வருகிறார் கந்தசாமி.
ஆர்.கே.நகர் தொகுதியில் தவெக சார்பில் பிரபலக் கல்வி நிறுவனத்தின் மேலாளரான மரியா வில்சன் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்தார். மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெண்ணிலா தாயுமானவன் மற்றும் சுயேச்சைகள் சார்பில் 4 வேட்புமனுக்கள் அங்குத் தாக்கல் செய்யப்பட்டன. இது தவிர சுயேச்சைகளாக என்.ஏ. மணி, வெங்கடேசன் ஆகியோர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
ராயபுரம் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் ஏ.பாபு மயிலனும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் முகம்மது மீராவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
