நிர் வறட்சியால் மக்கள் அவதியுறும் சந்தர்ப்பத்தில் ஹட்டன் டிக்கோயா நகர சபை பக்கச் சார்பாக செயல்படுகின்றதா எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நிலவி வரும் கடுமையான வெப்பச் சூழ்நிலையில் ஹட்டன் நகர மக்கள் தண்ணீருக்காகப் பெரும்பாடு பட்டு வருகின்றனர். ஹட்டன் நகர வாழ் மக்கள் அன்றாடத் தேவையான தண்ணீருக்காக ஐந்து ஆறு நாள்கள் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களிலும் இவ்வாறான நீர் வறட்சி தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும் இந்த முறை அனுபவிக்கும் அளவுக்கு மக்கள் துன்பத்தை அனுபவிக்கவில்லை என்று ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்
கடந்த ஆண்டில் அதிக மழை பெய்திருந்தும் தொடர்ந்து வந்த மாதங்களில் வறட்சி ஏற்பட்டு நகரில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
எனினும் கடந்த சபைகள் இந்தப் பிரச்சினையைச் சரியாகக் கையாண்டிருந்ததா என்று எண்ண வேண்டியுள்ளது. இதற்கு அனுபவமற்ற நகர சபையின் நிர்வாகம் காரணமா அல்லது பக்கச் சார்பான செயற்பாடு காரணமா என்று தெரியவில்லை.
இந்த விடயத்தை நாங்கள் ஆதாரம் இன்றிச் சுட்டிக் காட்டவும் இல்லை. சில தனியார் நிறுவனங்களுக்கு பெளசர் வண்டிகளில் சென்று நீர் கொடுக்கும் அதே நேரத்தில் சிறுவர்கள் கர்ப்பிணிகள் முதியோர்கள் குழந்தைகளுக்கான சுகாதார பிரச்சினைக்கு முகம் கொடுப்பவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
அண்மையில் நகர சபையின் செயல்பாடுகள் ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை என்று கூறி முன்னாள் நகர பிதாவாக இருந்த தற்போதைய சபை உறுப்பினர் அழகுமுத்து நந்தகுமார் அமர்விலிருந்து வெளியேறினார்.
நீர் விநியோகத்திலும் குப்பை விடயத்திலும் நகர சபை அசமந்த போக்கை கடைபிடிப்பதும் கவலைக்குரிய விடயமாகும்.
அதே நேரத்தில் ஆளும் கட்சியின் சபையான ஹட்டன் நகர சபை அபிவிருத்தியையும் நகரத்தையும் சரியாக நிர்வாகிக்க கூடிய வாய்ப்பு இருந்தும் நகர சபையின் செயற்பாடுகள் இப்பொழுது முகம் சுளிக்கச் செய்கின்றது.
ஒருபுறம் இயற்கையின் பாதிப்பு இந்த நிலைக்குக் காரணமாக இருந்தாலும் முறையான நிர்வாகமும் மக்கள் மீது பற்றுமிருந்தால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்பது ஶ்ரீமான் பொதுசனத்தின் அபிப்பிராயம்.
நகசபை அபிவிருத்திகளை முன்னெடுக்கும் பொழுது சுட்டிக்காட்டிய நாங்கள் அதன் பிழைகளை சுட்டிக்காட்டவும் தயங்கக் கூடாது.
அண்மையில் பல பிரதேசங்களில் நீர் தட்டுப்பாடு காணப்பட்டாலும் ஹட்டன் நகரைப் பொறுத்த மட்டில் நீருக்குப் பெரிய பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் அதனைச் சுற்றியுள்ள நீர் ஏந்தும் பிரதேசங்களில் நகருக்கு முறையாக நீரைக் கொண்டு வந்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கலாம்.
இவ்விடத்தில் நகர சபை சரியான கவனம் செலுத்தவில்லை எனில், நாட்டை நிர்வகிக்கும் அரசினால் ஹட்டன் நகருக்கு ஒருவிதமான நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றே தோன்றுகின்றது.
நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள், பாடசாலை மாணவர்கள், பயணிகள்,பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் மக்கள் பெருந்துயரைச் சந்திக்கின்றனர்.
ஹட்டன் நகரில் முறையான கழிவறை இல்லை. பேருந்து நிலைய பகுதியில் உள்ள கழிவறையில் நீர் இல்லாமல் ஹட்டன் நகர சபையால் சிறுநீர் கழிக்க 40/= ரூபாய் கட்டணம் அறவிட படுவது நியாயம் அற்ற செயல். முறையான பராமரிப்பு இருந்து கட்டணம் அறவிட்டால் பரவாயில்லை. இங்கே எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் நகர் முழுவதும் குப்பை கூளங்கள் நிறைந்துதான் காணப்படுகிறது. உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கள் கௌரவத்திற்காக வெள்ளையும் சொள்ளையுமாகத் திரிந்தால் மட்டும் போதும் என நினைக்கிறார்ள்போலும். நகரும் வெள்ளையாக தூய்மையாக இருந்தால்தான் உறுப்பினர்களின் வெள்ளைச் சட்டைக்கும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
செட்டியாப்பிள்ளை திருக்கோணபெருமாள்
