சிவி சண்முகத்தைக் கண்டித்த தென்னிந்திய நடிகர் சங்கம்!

அதிமுக மாநிலங்களவை எம்பி சிவி சண்முகத்தைக் கண்டித்து, நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இரண்டு பக்க இந்த அறிக்கையில், “அரசியலில் கோலோச்சிய இந்திரா காந்தி அம்மையார் உங்கள் தலைவி ஜெயலலிதா அம்மையாரை விடவா உதாரணம் இருக்க முடியும்? அப்படி இருக்க, சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம். இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா?” எனக் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக ஆட்சியைக் கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அவர், “அப்துல் கலாம் அனைவரையும் கனவு காணுங்கள் எனக் கூறினார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலேச் சென்று ’உங்கள் கனவைச் சொல்லுங்கள் நிறைவேற்றி வைக்கிறேன் என்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும். நிறைவேற்றி வைப்பாரா? சிலர் நயன்தாராவைத் திருமணம் செய்துவை எனக் கேட்பார்கள். செய்து வைப்பாரா?” எனப் பேசினார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.