பொலிஸ் கட்டளையை மீறிச் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு!

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் கனகர வாகனத்தை நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடித்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தைத் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தி; மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் மடக்கிப் பிடித்து 6600 மில்லி கிராம் ஹெரோயினுடன் சாரதியையும் உதவியாளரையும் நேற்று புதன்கிழமை (05) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி சம்பவ தினமான இரவு 10.30 இற்கு மண் ஏற்றிக் கொண்டு சென்ற கனரக வாகனம் ஒன்றை கரடியனாறு கருத்தப்பாலம் பகுதியில் து நிறுத்துமாறு பொலிசார் பணித்திருக்கிறார்கள்.

அப்போது அதனை மீறி கனகர வாகனம் செங்கலடி பகுதியை நோக்கி சென்றதையடுத்து அவர்களைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்ற நிலையில் அந்த வாகனம் வாழைச்சேனை நோக்கி தப்பி ஓடியுள்ளது.பின்னர் அதனைத் துரத்திச் சென்றபோது வாகனம் வாழைச்சேனையில் திரும்பி அங்கிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கிப் பயணித்திருக்கிறது.

இதனையடுத்து பொலிசார் வாகனம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்குத் தெரியபடுத்தினர். அவர்கள் அங்கு வீதித் தடையை அமைத்து அதனை நிறுத்துமாறு பணித்த போது அந்தத் தடையையும் மீறி கனரக வாகனம் தப்பி ஓடியபோதே ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த வாகனத்தை நோக்கி கைத் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார்.

அதனையும் மீறி வாகனம் மட்டு நகரை நோக்கி தப்பி ஓடிய நிலையில் மட்டு தலைமையகப் பொலிசார் நகரின் திருகோணமலை வீதி வை’ சந்தி பகுதியில் வீதிச் சோதனை அமைத்து கனரக வாகனத்தை மடக்கிப் பிடித்து சாரதியையும் உதவியாளரையும் கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட 25 வயதுடைய கரடியனாறு கித்துல் பகுதியைச் சேர்ந்த சாரதியிடம் இருந்து 3180 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் 22 வயதுடைய ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த உதவியாளரிடம் இருந்து 3420 மில்லி கிராம் ஹேரோயின் போதைப் பொருளையும் மீட்டு ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி கரடியனாறு பகுதியில் 8 மாடுகள் திருட்டு, வீடுடைத்து திருடிய சம்பவங்களுடன் தொடர்பட்டவர் எனவும் அவர் தலைமறைவாகி வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.