மட்டக்களப்பில் கேன்களில் எரிபொருள் வழங்கப்படாது

கேன்களில் எரிபொருள் பெறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ் அருள்ராஜ் தெரிவித்தார்.

சகல எரிபொருள் நிலையங்களிலும் போலீசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் சிலர் எரிபொருள் நிலையங்களில் பலவந்தமாக மேலதிக எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்வதாகத் தகவல் கிடைத்துள்ளதென்றும் அரச அதிபர் கூறினார்.

இது பற்றி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாகவும் சகல எரிபொருள் நிலைய முகாமையாளர்களுக்கும் இது பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நாம் கடந்த காலத்தில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அதனைக் கடந்து வந்தவர்கள். எனவே, பொதுமக்கள் பதற்றப்படாமல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் அருள்ராஜ் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு; விலையேற்றம் ஏற்படுமெனப் பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்பதை காண முடிகிறது.

இதேவேளை, நகரில் பிரதான இரண்டு எரிபொருள் நிலையங்களில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அதனால், பொதுமக்கள் திரும்பிச் செல்வதைக் காண முடிகிறது.

மட்டக்களப்பு வரதராஜன்