‘சுத்தமான இலங்கை’ மற்றும் இந்தியாவின் ‘ஸ்வச்சதா ஹி சேவா’ பிரசாரங்களை ஒருங்கிணைத்த ஐந்தாவது NCGG–SLIDA திறன்விருத்தி செயலமர்வு அண்மையில் நடைபெற்றது.
இந்தியாவின் “ஸ்வச் பாரத்” திட்டத்தின் கீழான “ஸ்வச்த ஹி சேவா 2025” பிரசாரம் மற்றும் இலங்கை ஜனாதிபதி அதி மேதகு அநுர குமார திசாநாயக்கா அவர்களின் ‘சுத்தமான இலங்கை’ செயல் திட்டம் ஆகியவற்றுக்கு அமைவாக இலங்கையின் 40 சிரேஸ்ட அரச அதிகாரிகள் 2025 செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 03 ஆம் திகதி வரை இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் (NCGG) “சுத்தமான நகரங்கள், சிறந்த எதிர்காலம்: பிராந்திய நடைமுறைகளுடன் நகர்ப்புற இலங்கையை மாற்றியமைத்தல்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற விசேட திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் பங்கேற்றனர்.
நிலையான நகர முகாமைத்துவம், சூழல் பொறுப்புகள், இரு நாடுகளினதும் தேசிய இலக்குகளை பிரதிபலிக்கும் வகையிலான மக்களின் பங்கேற்பு ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சித்திட்டத்துக்கான தொனிப்பொருள் தெரிவு செய்யப்படுள்ளது.
நகர திட்டமிடல், மாநகர ஆட்சி, நகர மட்டங்களில் பொது தனியார் பங்குடைமை, பிளாஸ்டிக் கழிவுகளை மீள் சுழற்சிக்கு உள்ளாக்கும் நோக்குடனான திண்ம கழிவுகள் முகாமைத்துவம், உள்ளூர் மட்டங்களில் கண்டுபிடிப்புகள் மற்றும் டிஜிட்டல் நிலைமாற்றம், நகர போக்குவரத்து போன்ற துறைகள் உட்பட பல விடயங்களை உள்ளடக்கிய நிபுணர்கள் மட்ட கலந்துரையாடல்களில் இக்குழுவினர் பங்கேற்றிருந்தனர்.
நகர்ப்புற விவகாரங்களுக்கான தேசிய நிறுவனம், முசோரி-டேராடூன் அபிவிருத்தி அதிகாரசபை, ஒருங்கிணைந்த பழங்குடி அபிவிருத்தி நிறுவனம், தெஹ்கண்ட் கழிவுகளிலிருந்து எரிசக்தி திட்டம் மற்றும் டில்லி மெட்ரோ ரயில் திட்டம் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கள விஜயங்கள் இத்திட்டத்தின் தொனிப்பொருளுடன் தொடர்புடைய வகையில் செயன்முறை ரீதியான விளக்கங்களைப் பெறுவதற்கு வழிவகுத்தது.
மாநகர ஆட்சி முறைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு, கழிவுகளிலிருந்து எரிசக்தி தீர்வுகள் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பொது சேவைகள் உள்ளிட்ட விடயங்களில் இப்பேராளர்கள் புதுமையான நடைமுறைகளை நேரடியாக பார்வையிட்டனர்.
ஐந்துவருட காலப்பகுதிக்குள் இலங்கையின் சிவில் சேவை அதிகாரிகள் 1500 பேருக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக இலங்கை அபிவிருத்தி நிர்வாக் நிறுவகத்திற்கும் NCGGக்கும் இடையில் 2024 டிசம்பரில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் முன்னெடுக்கப்படும் ஐந்தாவது திறன்விருத்தி நிகழ்ச்சித்திட்டம் இதுவாகும்.
இந்த பயிற்சித் திட்டத்துடன் குறித்த உடன்படிக்கையின் கீழ் பயிற்சிபெற்ற அதிகாரிகளின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்திட்டங்களில் பங்கேற்றவர்களின் நேர்மறையான பின்னூட்டங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இப்புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழான ஆறாவது செயல் திட்டமும் குறித்த தொனிப்பொருளின் கீழ் இலங்கை சிவில் சேவையின் மற்றொரு 40 அதிகாரிகளை உள்வாங்கியதாக நடைபெறவுள்ளது.


