வடக்கு அரசியல்வாதிகளும் சிறை செல்ல நேரிடும் - ராமலிங்கம்

வடக்கு அரசியல்வாதிகளும் சிறை செல்ல நேரிடும் ரணிலுக்கு நடந்ததுபோல் அவர்கள் வாழ்விலும் வசந்தம் வீசும் என்றும் ரணில் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்தார்.

வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார்.

தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமுகத் தீர்வு காணப்படும் என்று கடற்றொழில், நீரியல், கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இன்று (24.08.2025) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர்மேலும் கூறியவை வருமாறு,

“ ரணில் விக்கிரமசிங்கவை நெருங்க முடியாது, அவர்மீது கை வைக்க முடியாது, அவர் சர்வதேச இராஜந்திரம் தெரிந்தவர், நரித்தனமானவர், அவரோடு விளையாட முற்பட வேண்டாம் என எதிரணியினர் கூறி வந்தனர்.

இந்நிலையில் அவர்மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.

நாட்டுக்குத் தீங்கு, இழப்பு ஏற்படுத்தியது ரணிலா, ராஜபக்சவா என்பது எமக்கு முக்கியம் அல்ல. எவராக இருந்தாலும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தனக்குரிய கடமையை செய்யும்.

ஒரு சில வாரங்களில் வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் வாழ்விலும் வசந்தம் பிறக்கும் என நினைக்கின்றோம்.

மக்களுக்கு சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும். இந்த நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். தையிட்டி விகாரைப் பிரச்சினையும் தீர்க்கப்படும்.

வடக்குக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், முதலீடுகள் தொடர்பில் சில அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.

அவர்கள் பற்றியும் எமக்கு தெரியும். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்..வடக்கு அரசியல்வாதிகளும் சிறை செல்ல நேரிடும் என்றார்.

க. கிருஷாந்தன், ஊடகச் செயலாளர்

கடற்றொழில், நீரியல், கடல் வளங்கள் அமைச்சு