மு. க. முத்து விடைபெற்றார்!

மு. க. முத்து விடைபெற்றார் இன்று மாலை. அவரது புகழுடல் இன்று மாலை ஐந்து மணியளவில் அக்கினியில் சங்கமமானது.

மு. க. முத்து முன்னாள் தமிழ்நாட்டு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழக (திமுக) தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன் ஆவார்.

மு.கருணாநிதியின் மூத்த மனைவியும் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரியுமான பத்மாவதி இவரின் தாயார் ஆவார்.

முத்துவின் பிறப்பு 1948 சனவரி 14. முத்துவின் தாயார் பத்மாவதி, முத்துவைப் பெற்றெடுத்த சிறிது நேரத்திலேயே, காசநோய் காய்ச்சலால் 20 வயதில் இறந்துவிட்டார்.

பூக்காரி படத்தில் தொடங்கி பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார் மு. க. முத்து.

நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் பாடியும் உள்ளார். இவரின் நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா, சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க.. பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை.

நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றவை.

77 வயதான் முத்து சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். இன்று காலை எட்டு மணியளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

உடனடியாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அவர் இன்றைய கட்சி, அரசு பணிகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு முத்துவின் இறுதிக்கிரியைகளைக் கவனித்தார்.

திரையுலகத்தினர், திமுக தலைவர்கள், தொண்டர்கள், அமைச்சர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தும் வகையில் முத்துவின் உடல் கோபாலபுரம் இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

அவரது புகழுடல் இன்று மாலை அக்கினியில் சங்கமமானது. மு. க. முத்து விடைபெற்றார்!