குற்றப்பத்திரம் அச்சடிக்க ஒருகோடி ரூபாய்! செலவாகும் என்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் அறிவித்திருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12பேருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பத்திரத்தை [Indictment] அச்சடிக்க 10 மில்லியன் ரூபாய் (ஒரு கோடி) செலவாகும்.
எனவே, குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்ய மேலும் 21 நாள் அவகாசம் வழங்குமாறு பிரதி சொலிசிற்றர் ஜெனரல் (பிரதி மன்றாடியார் நாயகம்) லக்மாலி கிரிஹாகம நீதிமன்றத்தைக் கேட்டிருக்கிறார்.
அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. அன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும்.
திரு. கெகலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பிரதிவாதிகள் மீது 13 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
மனிதப் பாவனைக்கு உதவாத போலி இமியுனோகுளொபுலின் (Immunoglobulin) மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் 144.4 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக முறைப்பாடு!
ஊழலுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர் கமாந்தா துஷாரவின் இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணை கடந்த 2023 ஒக்டோபர் 13ஆம் திகதி ஆரம்பமானது.
சரியாக 20 மாதங்கள் நடந்த விசாரணையின் பின்னர் இப்போது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும் கட்டம் வந்திருக்கிறது. மொத்த சாட்சிக்காரர்கள் 348பேர்.
ஒரு பிரதிவாதிக்குக் குற்றப்பத்திரம் அச்சடிக்க செலவாகும் தொகை 866,575 ரூபாய். பன்னிண்டு பேருக்குமான மொத்தச் செலவு 10.4 மில்லியன் ரூபாய்.
இது சாத்தியமா என்றால், சாத்தியம்தான்.
வழக்கின் தன்மையைப் பொறுத்தும் வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களின் கட்டணத்தைப் பொறுத்தும் தொகை மாறுபடும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
இன்னும் விளக்கமாகச் சொன்னால், சாதாரண மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பதற்கும் விசேட நிபுணரிடம் சென்று சிகிச்சை பெறுவதற்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறதே! அப்படி வைத்துக்கொள்ளுங்களன்! என்கிறார்கள்.

