இந்திய வம்சாவளி தமிழருக்கு உதவி

இந்திய வம்சாவளி தமிழருக்கு உதவி வழங்கும் முகமாகக் கண்டியில் நேற்று (15) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு வைபவங்களில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கலந்துகொண்டார்.

இந்திய வம்சாவளித் தமிழ் (Indian Origin Tamil – IOT) மாணவர்களுக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் பல்வேறு துறைசார் உதவிகளை வழங்கும் வைபவங்கள் மத்திய மாகாணத்தில் நடைபெற்றன.

இந்த வைபவங்களில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துகொண்டு பல்வேறு துறைசார் உதவிகளை வழங்கினார்.

கண்டி இந்துக்கல்லூரி ஏற்பாடு செய்திருந்த வைபவத்தில் கலந்துகொண்ட உயர்ஸ்தானிகர், கல்லூரியின் வேண்டுகோளுக்கு இணங்க நூலகத்திற்குத் தேவையான கணினிகள், இசைக் கருவிகள், நூல்கள் போன்றவற்றையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

மாத்தளை மாவட்டத்தின் எல்கடுவை தோட்டத்தில் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளைப் பார்வையிட்டார். அத்துடன் அந்தத் திட்டத்தின் பயனாளிகளுடனும் கலந்துரையாடினார்.

எல்கடுவை தோட்டத்தில் மருத்துவ உபகரணங்களைப் பகிர்நதளித்த உயர்ஸ்தானிகர், அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மழை அங்கிகளையும் வழங்கினார்.

இந்திய வம்சாவளி தமிழருக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம், நான்காம் கட்டங்களில் 14 ஆயிரம் வீடுகள் பெருந்தோட்டப் பிராந்தியங்களில் நிர்மாணிக்கப்படுகின்றன.

இவறறில் 25 வீடுகள் எல்கடுவை தோட்டத்தில் நிர்மாணிக்கப்படுகின்றன.

இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் இயலுமான உதவிகளை இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுகொடுக்கத் தயாராக உள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

உயர்ஸ்தானிகர் உரை நிகழ்த்துகிறார்

இந்திய வீடமைப்புத் திட்டத்திற்குப் புறம்பாக பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகளில் 60 திறன் வகுப்பறைகளை உருவாக்குவதற்காக அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானதை உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

தவிரவும், பெருந்தோட்டங்களில் மேலும் ஒன்பது பாடசாலைகளைத் தரமுயர்த்த இந்திய அரசாங்கம் நிதியுதவி அளிக்கின்றது.

சீதையம்மன் ஆலயத்தைப் புனருத்தாரனம் செய்வதாக இந்தியப் பிரதமர் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அளித்த வாக்குறுதியையும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

இந்திய வம்சாவளித் தமிழ்ச் சமூகம் இலங்கைக்கு வந்த 200 ஆண்டை நினைவுகூருமுகமாக 750 மில்லியன் இந்திய ரூபாய் செலவில் மேற்கொள்வதாகக் கடந்த 2023இல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் திட்டங்களை இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கண்டியில் நடைபெற்ற வைபவங்களில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின்படி சூரிய மின்னொளி வசதிகள், பாடசாலைப் புத்தகப் பைகள், புத்தகங்கள் ஆகியவற்றையும் பெருந்தோட்டப் பகுதியின் சுமார் 2000 ஆசிரியர்கள் பயன்பெறும் ஆசிரிய பயிற்சியையும் பெற்றுக்கொடுப்பதாகக் கூறினார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025