பிரதமர் ஹரினி மருத்துவமனை விஜயம்

பிரதமர் ஹரினி மருத்துவமனை விஜயம் செய்து பஸ் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரின் நலன் விசாரித்துள்ளார்.
ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில் பயணித்த 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 35 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களின் நலனை விசாரிப்பதற்காக பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று (11) இரவு மருத்துவமனைகளுக்குச் சென்றிருந்தார்.
பிரதமர் கம்பளை, பேராதனை மருத்துவமனைகளுக்குச் சென்று, அங்கு சிகிச்சை பெறும் காயமடைந்தவர்களின் நலனை விசாரித்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளின் மருந்து தேவைகள், அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி சிகிச்சைக்குத்தேவையான வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் அவர் ஆராய்ந்தார்.
பிரதமருடன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரும் சென்றிருந்தனர்.
பஸ் விபத்தில் 22பேர் உயிரிழப்பு
ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் முன்னர் எட்டுப் பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் 13 பேர் என்று தகவல் வெளியானது.இறுதியாக 22பேர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பஸ் வண்டியே றம்பொடையில் விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தின்போது தாய் ஒருவர் தம் குழந்தையைக் காப்பாற்றுவதற்காகத் தன் மீது வீழ்ந்திருந்த பஸ்ஸின் பாகத்தைத் தாங்கிக்கொண்டு நீண்ட முயற்சி செய்திருக்கின்றார்.
எனினும், இறுதியில் குழந்தை மாத்திரம் காப்பாற்றப்பட்டது. இந்தத் துயரம் பற்றிய தகவல்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதமர் ஹரினி மருத்துவமனை விஜயம் செய்து காயமுற்றோரின் நலன்களை அறிந்துகொண்டுள்ளார்.



உயிரிழந்தவர்களில் 5 பெண்கள், 12 ஆண்கள் உள்ளடங்குவதாகவும், பஸ் சாரதியும் விபத்தில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பஸ்ஸில் சுமார் 75 பயணிகள் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொத்மலை பொது வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, கம்பளை,நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் கொத்மலை பொலிஸார், ஓடிக்கொண்டிருந்த பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டாக்டர் பிரசன்ன குமார குணசேன ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை ஆராய்ந்தனர்.

க. கிருஷாந்தன், ஹற்றன்