போர் முடிவுக்கு வரும் என அமெரிக்கா நம்பிக்கை

வாஷிங்டன்: ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டை ஏற்படுத்துவது குறித்து டிரம்ப் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்தள்ளது.

அதேவேளை, உடன்பாட்டுக்கு ஒத்துவர மறுத்து, ஈரான் தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால் அதன் மீதான பொருளியல் அழுத்தங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.

முன்னதாக, பிப்ரவரி மாத இறுதியில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தொடங்கிய போர் கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக டிரம்ப் கூறியிருந்தார்.

டெஹ்ரானுடன் நடத்தப்பட இருக்கும் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைப் பற்றி குறிப்பிட்ட அவர், அற்புதமான இரண்டு நாள்கள் வரும் என்று உறுதியளித்தார்.

இனி நடத்த இருக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வரக்கூடும் என்றும் திரு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஈரானுடனான கடல்வழி வர்த்தகத்தைத் துண்டித்துவிட்டதாக அமெரிக்கா கூறி வருகிறது. தனது கடற்படை முற்றுகையின் மூலம் ஈரானுக்கு அது கொடுத்துவரும் அழுத்தம் அதிகரித்துள்ளது.

நியூயார்க் போஸ்ட் செய்தித்தாளுக்குப் பேட்டியளித்த திரு டிரம்ப், அடுத்த இரு நாள்களில் புதிய பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறக்கூடும் என்றார்.

ஏற்கெனவே கடந்த வாரம் சனிக்கிழமை பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.