வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எரிபொருள் விநியோகிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கியூஆர் குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஒற்றையாக இருந்தால் ஒற்றைத் திகதிகளிலும் இரட்டையாக இருந்தால் இரட்டைத் திகதிகளிலும் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும்.
19ஆம் திகதி ஓர் ஒற்றை இலக்கத் திகதி என்பதால் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7,9 ஆகிய ஒற்றை இலக்கங்களைக் கொண்டிருந்தால் எரிபொருள் பெற முடியும். அதுபோல், பூஜ்ஜியம், 2,4,6,8 ஆகிய இலக்கங்கள் இரட்டை இலக்கங்கள் ஆகையால் இரட்டைத் திகதிகளில் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாளாந்தம் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டு வருவதாலும், உள்நாட்டில் எரிபொருளுக்கான கேள்வி வழமைக்கு மாறாக அதிகரித்து வருவதாலும், நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் QR குறியீடு முறைமையைச் செயற்படுத்த அரசாங்கம் கடந்த 16ஆம் திகதி முதல் நடவடிக்கை எடுத்தது.அதனை மேலும் இலகுபடுத்தும் முகமாக ஒற்றை, இரட்டை திகதிகளையும் இலக்கங்களையும் வேறுபடுத்தி எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுத்ததாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
