இலங்கை நிலவரம் குறித்து ஐநாவில் அறிக்கை

இலங்கை நிலவரம் குறித்து ஐநாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் “இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை” குறித்த தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் ‘தனது அறிக்கையை சமர்ப்பிக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வு செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைபெறும்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலின்படி, அமர்வின் ஆரம்ப நாளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

செம்மணி புதைகுழி தளத்திற்கான அவரது வருகையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள அறிக்கையில் முக்கியமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள UNHRC இன் 60 ஆவது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானத்தை தாக்கல் செய்ய பிரித்தானியாவும், கனடாவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் UNHRC அமர்வில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையை அவர் சமர்ப்பிப்பார்.