நிலந்த ஜயவர்தன பதவி நீக்கம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழு இவரைப் பதவி நீக்கம் செய்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கடமை தவறியதாக குற்றம் சாட்டப்படிருந்தார்.

இதன்படி அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை நடத்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்தது.

இதற்கமைய முறையான ஒழுங்கு விசாரணையின் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயத்தால் 2025.07.04 அன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

முறையான ஒழுங்கு விசாரணை அறிக்கை, முறைப்பாட்டை கையாளும் அதிகாரியின் அறிக்கை, பாதுகாப்பு அதிகாரியின் அறிக்கை, அந்த அறிக்கையுடன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

1.முறையான ஒழுக்காற்று விசாரணை அறிக்கையின்படி, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன குற்றவாளி எனக் கண்டறிந்தது.

2. மேற்கூறிய குற்றச்சாட்டுகள், நிறுவனக் குறியீட்டின் வகை II இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி பொது அதிகாரிகளால் செய்யக்கூடிய குற்றங்கள் தொடர்பான முதல் அட்டவணையின் கீழ் வரும் குற்றங்கள் ஆகும்.

    அதன்படி 2025.07.17 அன்று கூடிய தேசிய பொலிஸ் ஆணைக்குழு மேற்குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அதிகாரி குற்றவாளி எனத் தீர்மானித்தது.

    அவர் செய்த குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, 2025.07.17 அன்று நடைபெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழு அமர்வில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிலந்த ஜயவர்தன பதவி நீக்கம் செய்யப்படுகிறார்.