தூத்துக்குடி கொழும்பு கப்பல் சேவை

தூத்துக்குடி கொழும்பு கப்பல் சேவை மூலம் பண்டங்களைப் போக்குவரவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு தினசரி சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு இந்திய மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.
வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் பழைய துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்ல சுமாா் 25 படகுகள் இயக்கப்படுகின்றன.
இதில், சுமாா் 250 முதல் 400 டன்களுக்கு மேல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் படகுகள் உள்ளன.
இந்த பாரம்பரிய படகு தொழிலை நம்பி தூத்துக்குடியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனா்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலைதீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் படகு மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருள்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன.
பொதுவாக படகு போக்குவரத்து கடல் வானிலையைக் கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது.
இதில், மே 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி வரை கடலில் மோசமான வானிலை காணப்படுவதால் படகு இயக்க அனுமதி இல்லை.
செப்டம்பா் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே படகு போக்குவரத்து நடைபெற்று வந்தது. இதுகுறித்து படகு உரிமையாளா்கள் சங்க செயலா் எஸ். லசிங்டன் கூறுகையில்,
2008ஆம் ஆண்டு அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட படகு விபத்து காரணமாக அப்போதிருந்து படகு போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதற்கு முன்னா் மோட்டாா்கள் இல்லாத காலத்திலும் நாள்தோறும் படகு இயக்கப்பட்டு வந்தது. தற்போது, பல்வேறு அதி நவீன வசதிகள் படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
தூத்துக்குடி கொழும்பு கப்பல் சேவை மூலம் சரக்குகளைக் கொண்டுசெல்ல 17 முதல் 20 மணிநேரம் ஆகும். ஒரு படகு மாதத்தில் 3 முறை தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு பொருள்களை கொண்டு சென்று வருகிறது.
மேலும் இது அதிக அளவிலான பொருள்களை நகா்த்துவதற்கான வேகமான வழிகளில் ஒன்றாகும்.
எனவே, இது தொடா்பாக தூத்துக்குடி படகு உரிமையாளா் சங்கத்தின் சாா்பில், கப்பல் போக்குவரத்து துறை இயக்குநரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அதில் படகுகளில் தற்போது அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள், தகவல் தொடா்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அதே போன்று காலநிலையால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை.
ஆகையால் தூத்துக்குடி-கொழும்பு, தூத்துக்குடி-மாலி இடையே ஆண்டு முழுவதும் அனைத்து பருவகாலங்களிலும் படகு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை பரிசீலித்த மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம், தூத்துக்குடி-கொழும்பு இடையேயான படகு போக்குவரத்து உரிய நிபந்தனைகளுடன் அனைத்து பருவ காலங்களிலும் அனுமதி அளித்துள்ளது.
மேலும் தூத்துக்குடி-மாலைதீவு இடையேயான படகு போக்குவரத்து அக்டோபா் 1 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இயக்கப்பட்டதை, மே மாதம் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளனா்.
இதனால், பாரம்பரிய போக்குவரத்து தொழிலான படகு தொழில் நீண்டகாலத்திற்கு பின்னா் மீண்டும் புத்துயிா் பெற்றுள்ளது என்றாா்.
