தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் பிடிபட்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் ஒரே அறையில் இருந்த 17 கைதிகள் காவலர்களை அடித்துவிட்டு திங்கள்கிழமை இரவு தப்பிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வரும் நிலையில், 4 கைதிகளை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.
ஆட்டோவில் தப்பிக்க முயன்ற மாற்றுதிறனாளி கைதி ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் காவலர்களிடம் ஒப்படைத்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தேனிக்கு வந்த சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், சிறையில் இருந்து தப்பிய கைதிகளில் மேலும் 8 பேர் பிடிபட்டுள்ளனர். மலைப்பகுதியில் பதுங்கியிருந்தவர்களை டிரோன் மூலம் ஆய்வு செய்து காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
தப்பியோடிய 17 பேரில் தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதி 4 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
