இலங்கைக்குத் தெற்கே இந்தோனேசிய மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளானது. இதிலிருந்து 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு தெற்கே அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான இந்தோனேஷிய மீன்பிடிப் படகில் இருந்த 25 இந்தோனேஷியப் பிரஜைகள் MV MOONSTONE கப்பலினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
KM ‘GARUDA JAYA VI’ என்ற இந்தோனேஷிய மீன்பிடிப் படகு கடந்த 22ஆம் திகதி கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது கவிழ்ந்துள்ளது. இதனால் படகில் இருந்தவர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளனர்.
இதனையடுத்து, ஆபத்தில் சிக்கிய 25 பேரை MV MOONSTONE கப்பல் மீட்டதுடன், அவர்களை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வருவதற்காக கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
இதற்கமைய, அந்த மையத்தின் ஒருங்கிணைப்பில் நேற்று (24) கடற்படையினரால் இரண்டு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
மீட்கப்பட்ட 25 இந்தோனேஷியப் பிரஜைகளும் கடற்படைக் கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக இந்தோனேஷிய தூதரகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
