கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகம் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
விஞ்ஞானம், தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் கத்தோலிக்க சபையுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்கள், கத்தோலிக்க மதத்திற்கான ஆசிரியர்கள் தொடர்பான பொறிமுறையினைத் தயாரித்தல், ஆசிரியர் தொழிலுக்காக கத்தோலிக்கத் கன்னியாஸ்திரிகளையும் அருட்தத்தைமார்களையும் உள்வாங்குவது குறித்த தற்போதைய முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல் என்பன குறித்து ஆராயப்பட்டது.
அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சின் ஆதரவைப் பெறும் முறைமை பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வருடத்திற்கு மூன்று தடவை கத்தோலிக்க சபையுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவது தொடர்பில் கத்தோலிக்க சபை சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.
எந்தவித பேதமுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தங்களது மதத்தைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதே தமது அபிலாஷை என்றும், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நிலைமையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கத்தோலிக்க சபையின் உறுப்பினர்களான அருட்தந்தை ஹெரால்ட் ஆண்டனி பெரேரா, அருட்தந்தை விமல் சிறி ஜயசூரிய, அருட்தந்தை மெக்ஸ்வெல் சில்வா ஆகியோருடன் கத்தோலிக்க சபையின் ஏனைய உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கத்தோலிக்க சபையின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவா, கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் டப்ளியூ. ஏ. நீலிகா பெரேரா (பாடசாலை அலுவல்கள்) உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
