மட்டக்களப்பில் தீபத் திருநாளை ஒட்டி விசேட வழிபாடுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீபத் திருநாளையொட்டி இந்து ஆலயங்களில் நெய் விளக்கேற்றி விசேட வழிபாடுகள் நடைபெறுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று (24)அடியார்களின் அரோகரா கோசத்துக்கு மத்தியில் ஆலய பிரதம குரு சபரீஸ்வர சைதன்ய குருக்கள் தலைமையில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் பூசைகள் பக்தி பூர்வமாக இடம் பெற்றன.

மட்டக்களப்பில் தீபத் திருநாளை ஒட்டி விசேட வழிபாடுகள்!

ஆலயத்தில் கலந்து கொண்ட பக்த அடியார்களால் ஆலயத்தில் வெற்றிலையைக் கழுவி அதற்குத் திருநீறு, சந்தனம், குங்குமம் தடவி; அதற்கு மேல் நெய்விளக்கு வைத்து; அதற்கும் மங்கலப் பொருள்களைத் தடவி தீபங்களை ஏற்றி முருகனுக்குத் தீபாராதனை காட்டி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அதன்பின் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் ஒன்றாகிய அதிகளவிலான அடியார்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து கருவறையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு சிறப்பு திருநாளாகிய இன்று முருகனின் திருமேனியை தொட்டு திருப்பாதத்தில் மலர்கள் தூவி வழிபாடுகளில் ஈடுபட்டனர்

இன்றைய திருக்கார்த்திகை தீப திருநாளையொட்டி சகல முருகன் ஆலயங்களிலும் ருகப்பெருமானுக்கு விசேட வழிபாடுகள் இடம் பெற்றன.

தங்களது குடும்பங்களுக்கு இறை ஆசீர்வாதம் வேண்டி பக்த அடியார்கள் விரதம் இருந்து நெய் விளக்கேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.

மட்டக்களப்பு எஸ்.வரதராஜன்