இரத்தினபுரி மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது ஆசிரிய குழாத்திற்குப் பயிற்சியளித்த கல்வியாளர் கௌரவிப்பு விழா நேற்று (23) நடைபெற்றது.
1981,1983 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இனக்கலவரத்தைத் தொடர்ந்து தென் பகுதியில் உள்ள பாடசாலைகளில் கடமை புரிந்த வடகிழக்கு மாகாண ஆசிரியர்கள் தமது சொந்த ஊருக்குத் திரும்பினர் அதன் பின்னர் இந்தப் பாடசாலைகளில் குறிப்பாகத் தோட்டப் பாடசாலைகளில் பாரிய ஆசிரிய பற்றாக்குறை ஏற்பட்டது. சில பாடசலைகள் மூடப்படும் தறுவாயில் காணப்பட்டன.
இதன் பின்னர் பெருந்தோட்ட பாடசாலைகளை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையாக கல்வி அமைச்சு பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரியர் பயிற்சி திட்டத்தின் கீழ் (PSTP) ஒரு வருடப் பயிற்சியின் (1985/1986) பின்னர் 1986 ஆம் ஆண்டு ஆசிரிய நியமனம் வழங்கியது.
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கென ஆசிரிய நியமனம் வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இரத்தினபுரி மாவட்டத்தில் பயிற்சி பெற்ற 46 பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.இவ்வாறு நியமனம் பெற்றவர்கள் அதிபராக, ஆசிரிய ஆலோசகராகப் பதவியுயர்வு பெற்று அளப்பரிய சேவையாற்றினர்.
இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற நிலையில் அதாவது தாம் நியமனம் பெற்று 40 வருடம் கடந்த நிலையில், தமக்குப் பயிற்சியளித்த ஆசான்கள், விரிவுரையாளர்களை மறக்காமல் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி இரத்தினபுரி கிரேண்ட் சபையர் விருந்தகத்தில் நேற்று 23 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் சபரகமுவை மாகாண முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என். செல்வராஜ், முன்னாள் அதிபர் சைவப்புலவர் நடா ஜெயராஜன், முன்னாள் ஆசிரிய ஆலோசகர் ஜே.ஏ. முத்தலிப் ஆகியோர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
ஆசிரியர்கள் தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதுடன் இனக்கலவரத்தின் பின்னர் தோட்ட மாணவர்களின் கல்வி கேள்விக்குறியான நிலையில், தாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துப் பாடசாலைகளைப் பொறுப்பேற்றுக் கடமை புரிந்ததாகவும் இதனால் இன்று மலையகம் கல்வியில் மறுமலர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
தமக்குப் பயிற்சியளித்த ஆசான்கள், நியமனம் பெற வழிவகுத்த அனைவருக்கும் தமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்






