மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்மாதிரி கலாநிதி ஹிஸ்புல்லாஹ் எம்.பி.

சுமார் 500 முஅத்தின்கள், இமாம்களை உம்ராவுக்கு அனுப்பி கௌரவப்படுத்திய ஹிஸ்புல்லாஹ்விடமா ஆன்மீகப் பயணத்தின் புனிதத்தையும் தியாகத்தையும் பற்றிப் பேசுகிறீர்கள்..?!

இலங்கை அரசியல் வரலாற்றில் மக்கள் பிரதிநிதித்துவத்திற்கு இலக்கணமாகத் திகழும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் மக்கள் சேவையும், ஆன்மீகப் பணியும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய, வசதியற்ற 500-க்கும் மேற்பட்ட ஏழை முஅத்தின்கள் மற்றும் இமாம்களைத் தனது சொந்த முயற்சியில் புனித உம்ரா வழிபாட்டிற்காக அனுப்பி வைத்த ஒரு சிறந்த தலைவர் அவர்.

ஆன்மீகப் பணியாளர்களையும், மார்க்க அறிஞர்களையும் கௌரவித்து, அவர்களின் வாழ்நாள் கனவை நனவாக்கிய ஒரு தலைவரைப் பார்த்து “உங்களுக்கு தியாகத்தைப் பற்றி தெரியுமா?” என்று சிலர் கேள்வி எழுப்புவது வேடிக்கையானதும், வரலாற்றை அறியாத அறியாமையுமாகும்.

புனித ஹஜ் கடமையின் போது, மினா தங்குமிடங்களில் இலங்கை ஹாஜிகள் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டனர். தங்குமிட பற்றாக்குறை, நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக நமது நாட்டு ஹாஜிகள் பட்ட அவஸ்தைகளை எவரும் மறுக்க முடியாது. இந்த அவலங்களை, மக்களின் உண்மையான பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மிக ஆணித்தரமாக வெளிக்கொணர்ந்தார்.
ஆனால், அதற்குப் பதிலளித்த சிலர், “ஹஜ் என்பது தியாகம், அதைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்ற பாணியில் மினாவின் அவலங்களை நியாயப்படுத்த முயன்றனர்.

தியாகம் எது? அநீதி எது?
மார்க்கத்தின் பெயராலும், தியாகத்தின் பெயராலும் நிர்வாகச் சீர்கேடுகளை மூடிமறைக்க முயல்வது அப்பட்டமான ஏமாற்று வேலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மலசலகூடத்திற்கு முன்னால் பல மணிநேரம் காத்திருப்பது தியாகமல்ல. முதியவர்களும், பெண்களும், நோயாளிகளும் அடிப்படைத் தேவைகளுக்காக மணித்தியாலக் கணக்கில் மினாவின் வெயிலில் தவிப்பது தியாகம் அல்ல; அது முறையற்ற நிர்வாகத்தினால் திணிக்கப்பட்ட அநீதி.

பல்லாயிரக்கணக்கில் பணம் செலுத்திவிட்டு, பசியோடும் தாகத்தோடும் முறையான உணவின்றி ஹாஜிகள் அலைக்கழிக்கப்படுவது தியாகத்தின் பாற்பட்டது அல்ல.
இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களுக்கு முரணாக, போதிய இடவசதியின்றி தங்குமிடங்களில் ஆண், பெண் கலப்பு ஏற்படும் நிலைக்கு ஹாஜிகள் தள்ளப்படுவது எந்த வகையிலும் மார்க்கம் சொல்லும் தியாகம் கிடையாது.
ஹஜ் என்பது சகிப்புத்தன்மைதான். ஆனால், பொறுப்பற்ற அதிகாரிகளின் மற்றும் முகவர்களின் தவறுகளால் ஏற்படும் துன்பங்களை “தியாகம்” என்ற போர்வையில் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது பொருளல்ல.

கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசியது ஹாஜிகளின் உரிமைகளுக்காக மட்டுமே. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், தங்கள் தாய்நாட்டை நம்பிச் சென்றுவிட்டு, அங்கு தவித்துக் கொண்டிருந்த அநாதரவான இலங்கை ஹாஜிகளின் அழுகுரலாகவே ஹிஸ்புல்லாஹ்வின் குரல் ஒலித்தது.

500 இமாம்களை உம்ராவுக்கு அனுப்பி, ஆன்மீகப் பயணத்தின் புனிதத்தையும் அதன் நடைமுறைச் சவால்களையும் மிக நெருக்கமாக உணர்ந்த ஒரு தலைவருக்கு, ஹாஜிகளின் வலி நன்றாகவே தெரியும். எனவேதான், அவர் அதிகார வர்க்கத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்டார்.
நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியவரைப் பார்த்து “தியாகம் தெரியுமா?” எனக் கேட்பவர்கள், முதலில் தியாகத்திற்கும் திறமையற்ற நிர்வாகத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹாஜிகளின் கண்ணீரைத் துடைக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் செயல், அநீதிக்கு எதிரான தார்மீகக் கடமையே தவிர வேறொன்றுமில்லை. அவரது இந்தத் துணிச்சல் என்றும் பாராட்டத்தக்கது.

(எஸ். சினீஸ் கான்)