சட்டவிரோத மலர்ச்சாலையைத் தடைசெய்ய உத்தரவு

சட்டவிரோத மலர்ச்சாலையைத் தடைசெய்ய உத்தரவு: கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான பொரளை மயானத்தின் உத்தியோகபூர்வ விடுதியை மோசடியாகப் பயன்படுத்தி கொழும்பு மாநகர சபையின் ஊழியர் ஒருவர் மலர்ச்சாலையொன்றை நடத்தி வந்தமை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கடந்த பெப்ரவரி 25ஆம் 27ஆம் திகதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் கூடியபோது இடம்பெற்ற விசாரணைகளிலேயே இந்த விடயம் வெளிப்பட்டது.
இந்த இரு தினங்களிலும் கொழும்பு மாநகரசபையின் 2022, 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து ஆராய்வதற்காக அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
பொரளை மயானத்திற்குச் சொந்தமான காணியில் அனுமதி பெறப்படாத கட்டடத்தில் சட்டவிரோதமான முறையில் வர்த்தகச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் கொழும்பு மாநகரசபை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையென கணக்காய்வாளர் நாயகம் முதலாவது நாளில் சுட்டிக்காட்டினார்.
2023.07.06ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கட்டடத்தை மீண்டும் கொழும்பு மாநகரசபைக்குப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட அறிவுறுத்தல் உள்ளடங்கலான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னர் கூடிய அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு அமைய கொழும்பு மாநகரசபையினால் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் கட்டடத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் முன்னேற்றம் பற்றி எதுவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
மலர்ச்சாலையை நடத்திச் செல்வதற்கான அனுமதி பெறப்படாது சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் மலர்ச்சாலையாக இருந்தபோதும், கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வியாபார நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பதிலளித்தனர்.
எனினும், சுற்றுச்சூழல் அறிக்கை இன்றி மலர்ச்சாலையை எவ்வாறு நடத்திச் செல்ல முடியும் என குழுவின் தலைவர் கேள்வியெழுப்பினார். எனினும், அவ்வாறு அனுமதி பெறாமல் இயங்க முடியாது என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனவே, சட்டவிரோதமாக நடத்திச் செல்லப்படும் இந்த மலர்ச்சாலையைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு குழுவினால் அறிவுறுத்தப்பட்டது.