லிந்துலையில் மாணவி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் கைது!

பாடசாலை மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், இரு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபர் ஒருவரை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி, லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உள்ளூர் தோட்டம் ஒன்றில் வசித்து வருகிறார்.

மாணவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அவரின் பாடசாலை ஆசிரியர், இது குறித்து மாணவியின் தாய்க்கு அறிவித்ததைத் தொடர்ந்தே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

தனது மகளிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்திய பின்னர், மாணவியின் தாய் இது குறித்து வியாழக்கிழமை (மே 21) லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட லிந்துலை பொலிஸ் நிலையத்தின் மகளிர்,சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர், மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில், மாணவி இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக மாணவி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி (JMO) முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பாதிக்கப்பட்ட மாணவி வசிக்கும் அதே தேயிலைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கௌசல்யா