2025இல் தித்துவா புயலின்போது கலாஓயா பகுதியில் பஸ்ஸொன்றில் சிக்கிக்கொண்ட 69 பேரைப் பாதுகாப்பாக மீட்டமைக்காக, கடற்படை வீரர்கள் மூவருக்கு பொநுநலவாய உயிர்க்காப்பு வீரர்களுக்கான விருதும் இலங்கை உயிர் காக்கும் வீரர்களுக்கான பதக்கங்களும் வழங்கப்பட்டதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று (19) நடைபெற்ற வைபவத்தில் விருதுகள் வழங்கப்பட்டன. கடுமையான காலநிலையினால் பயணிகள் பஸ் சிக்கிக்கொண்டபோது கடற்படையினர் துணிச்சலுடன் செயற்பட்டு அனைவரையும் மீட்டமை குறிப்பிடத்தக்கது.
விழாவில், பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் அன்றூ பட்ரிக், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்திவ் டக்வர்த் ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர்.
இலங்கை கரையோரக் காவற்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவான் ரூப்பசேனா, இலங்கை உயிர்க்காப்புக் கழகத்தின் தலைவர் அத்துல சேனாரத்தினா,பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணாயக்கார ஆகியோரும் பங்குபற்றினர். (நியுஸ்வயர்)
