முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தரச் சம்பளம், ஓய்வூதியம்: ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு அமைச்சர் இணக்கம்.!
கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முன்பள்ளிப் பாடசாலைகள், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் குறைந்தபட்ச கல்வித் தகைமைகள், பொதுவான பாடத்திட்டம், ஆசிரியர்களுக்கு நிரந்தரச் சம்பளம் மற்றும் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று (6) பாராளுமன்றத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்ததுடன், பல்வேறு முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தார்.
இதற்குப் பதிலளித்த மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், இலங்கையிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதுடன், அவர்களுக்கான நிலையான சம்பளக் கட்டமைப்பையும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தையும் (Contributory Pension Scheme) அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
தற்போது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவு அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை என்பதையும் அமைச்சர் ஏற்றுக்கொண்டார். அத்துடன், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வை மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் இணைந்து வழங்குவது தொடர்பாக ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த முன்மொழிவுகளுக்கும் அமைச்சர் சாதகமான பதிலை வழங்கினார்.
இதேவேளை, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள கிராமப்புறப் பாடசாலைகள் எதிர்நோக்கும் அடிப்படை வசதிக் குறைபாடுகள் குறித்தும் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தினார்.
குறிப்பாக, பல கிராமப்புறப் பாடசாலைகளில் போதிய கழிப்பறை வசதிகள், பாதுகாப்பான குடிநீர் வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான கதிரை, மேசைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மற்றும் நிதி நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இவ்வாறான பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கத்தின் ஊடாக விசேட நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தப் பிரச்சினைகள் கிழக்கு மாகாணத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய குறைபாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கான நிதியை நிதி அமைச்சர் ஒதுக்கீடு செய்து, அடுத்த வருடத்திற்குள் பாடசாலைகளின் அடிப்படை வசதைகளை மேம்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஹிஸ்புல்லாஹ்வின் இந்தக் கோரிக்கைகள் தொடர்பிலும் அமைச்சர் சாதகமாகப் பதிலளித்து இணக்கம் தெரிவித்தார்.
முன்பள்ளி ஆசிரியர்களின் நீண்டகால சம்பள மற்றும் ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், கிராமப்புறப் பாடசாலைகளின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதைகளை மேம்படுத்துவதற்கும் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட இந்தத் தலையீடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
- ஊடகப்பிரிவு
