இலங்கையில் ஆண்டுதோறும் 6 ஆயிரம் மார்பகப் புற்றுநோயாளர்கள் அடையாளம்!

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 6,000 புதிய மார்பகப் புற்றுநோய் நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதாகவும், நாளொன்றுக்கு பதிவாகும் புதிய நோயாளர்களின் எண்ணிக்கை 15 ஆகவும், நாளாந்த மரணங்களின் எண்ணிக்கை 3 ஆகவும் பதிவு செய்யப்படுவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் காஞ்சனா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

​மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல்,அது தொடர்பில் சமூகத்தில் இருக்க வேண்டிய விழிப்புணர்வு குறித்து இன்று (30) அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

​பெண்ணாக இருப்பது மாத்திரமே மார்பகப் புற்றுநோய் தாக்கும் பிரதான காரணியாக அமைவதுடன், வயது அதிகரிக்கும் போது இந்நோயின் ஆபத்தும் அதிகரிக்கிறது.

இவை மாற்ற முடியாத ஆபத்து நிலைமைகளாகக் காணப்பட்டாலும், மாற்றிக்கொள்ளக்கூடியகாரணிகளாகவும‌உள்ளன.

குறிப்பாக அதிக உடல் எடை, உடற்பயிற்சியின்மை, புகை பிடித்தல்,இரசாயனப் பொருள்கள் கலந்த உணவுகளைப் பயன்படுத்துதல் போன்ற காரணிகள் இந்த புற்றுநோய் அதிகரிக்கச் செல்வதாக வைத்தியர் சுட்டிக்காட்டினார்..

​தற்போதைய சமூகத்தில் இந்த நிலைமை பரவலாகக் காணப்படுகிறது.

இந்த மார்பக புற்று‌நோயின் ​பிரதான ​அறிகுறிகள் பின்வருமாறு‌ காணப்படுகிறது:

​மார்பகத்தில் கட்டி போன்று உணர்தல் (எவ்வாறாயினும், அவற்றில் 99% கட்டிகள் புற்றுநோயற்றவையே ஆகும்).
​அக்குள் பகுதியில் கட்டிகள் தோன்றுதல்.
​மார்பக அளவுகளில் மாற்றங்கள் ஏற்படுதல்.
​தோலில் வீக்கம் போன்ற மாற்றங்கள் அல்லது தோல் உள்ளிழுக்கப்பட்டு காணப்படுதல்.
​மார்பகத்திலிருந்து இரத்தம் கலந்த திரவம் வெளியேறுதல் போன்றவையாகும்
​
கொழும்பு வடக்குபோதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் நதிந்த முணசிங்க கருத்து தெரிவிக்கையில்,

இலங்கைப் பெண்கள் பெரும்பாலும் விழிப்புணர்வுடன் காணப்பட்டாலும், சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகள் மற்றும் பயம் காரணமாக சிகிச்சைக்கு செல்வதற்கு தயங்குவதாகக் குறிப்பிட்டார்.

​”சமூகத்தில் நிலவும் பயம், மூடநம்பிக்கைகள் காரணமாக சிகிச்சைகளுக்குச் செல்லப் பயப்படுகிறார்கள்.

முடி கொட்டிவிடும் என்ற அச்சம், சத்திரசிகிச்சைக்குச் சென்றால் மார்பகங்களை இழக்க நேரிடும் என்ற பயம், ஒரு பெண்ணுக்குரிய இயல்புகள் இல்லாமற் போய்விடும் என்ற அச்சம், இந்நோய் மீண்டும் மீண்டும் பரவக்கூடும் என்ற தவறான எண்ணங்கள் சமூகத்தில் உள்ளன.

அதுமட்டுமின்றி, பரிசோதனைகளால் உறுதிப்படுத்தப்படாத முறைகளை நாடிச் செல்லும் சிலரும் உள்ளனர்.

இந்த பயம் காரணமாக சில பெண்கள் சிகிச்சைக்குத் தாமதமாக வருவதுடன், அவ்வேளையில் நோய் உடல் முழுவதும் பரவியிருக்கக் கூடும்” என அவர் தெரிவித்தார்.

​எவ்வாறாயினும், ஆரம்ப நிலையிலேயே வைத்தியர்களை நாடுவதன் ஊடாக இந்நோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எஸ்.ஆர்.இரவீந்திரன்