ஹோமாகமை குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!

ஹோமாகமை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த அவரை, மேல் மாகாண தெற்குக் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸ் காவலில் இருந்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், ஹோமாகமை பொலிஸ் நிலையக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்காக அவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அவருக்கு மேலதிகமாக, அப்பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர்,பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் பணியும் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கிரிவத்துடுவை பிரதேசத்தைச் சேர்ந்த -இரண்டு பிள்ளைகளின் தந்தையான – இஷார ஹர்ஷ குமார எனும் 29 வயதுடைய குடும்பஸ்தராவார்.

பொலிஸாரின் கடுமையான தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.