October 23, 2026 7:40 pm
சம்மாந்துறையில் உயிருக்கு போராடும் யானையைக் காப்பாற்ற தீவிர முயற்சி!

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பகுதியில் திடீரென நோயுற்று விழுந்து கிடக்கும் காட்டு யானையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கால்நடை வைத்தியக் குழுக்கள், இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 25 முதல் 30 வயதிற்கு இடைப்பட்ட இந்த ஆண் காட்டு யானை, பொதுவாக நல்ல ஆரோக்கியத்துடனும் திடகாத்திரமாகவும் காணப்பட்ட ஒரு விலங்கு என அவதானிக்கப்பட்டுள்ளது.

யானையின் உடலின் வெளிப்பகுதியில் காயங்கள் எதுவும் காணப்படாத போதிலும், அதன் வயிற்றுப் பகுதி வீங்கியுள்ளதால், ஏதேனும் விஷம் உடலில் சென்றடைந்திருக்கலாம் அல்லது செரிக்காத பொலித்தீன் வகைகளை உட்கொண்டதால் ஏற்பட்ட இரைப்பை அடைப்பு காரணமாக இவ்வாறு நோயுற்றிருக்கலாம் என ஆரம்பகட்டத்தில் சந்தேகிக்கப்படுகிறது.

கிழக்கு பிராந்திய வனஜீவராசிகள் கால்நடை வைத்தியப் பிரிவு, அம்பாறை வனஜீவராசிகள் வலய அலுவலகம் மற்றும் சம்மாந்துறை பீட்டு அலுவலகம் என்பன இணைந்து இந்த தீவிர சிகிச்சை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றன.

அத்துடன், நேற்று (22) விலங்கிற்கு அத்தியாவசிய நுண்ணுயிர் எதிர்ப்பி (Antibiotics) மருந்துகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.

அப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக யானை விழுந்து கிடந்த பகுதி நீரில் மூழ்கியமை சிகிச்சை நடவடிக்கைகளுக்கு இடையூறை ஏற்படுத்திய போதிலும், சிகிச்சைகளை தடங்கலின்றி முன்னெடுப்பதற்காக அந்த இடத்தில் மணல் கொட்டி நிலத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த சிக்கலான மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்தின் 10 அதிகாரிகளின் உதவி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பும் அதற்கு கிடைத்துள்ளது.

விலங்கின் பாதுகாப்பை உறுதிசெய்து, உரிய நேரத்தில் மருந்துகளை வழங்குவதற்காக இரவும் பகலும் வனஜீவராசிகள் அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்தில் தங்கியிருந்து தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.