துபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் என்பவர், போதைப்பொருள் கடத்தலுக்கு புறம்பாக சட்டவிரோத ஆயுதக் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளதாக விசாரணைப் பிரிவினருக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, மஹேன் கோபல்லவ மற்றும் ஏ. பிரேம்சங்கர் ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (19) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுரேஷ் ஞானராஜ் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், சந்தேகநபரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்துள்ளமை முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பானது எனக் குறிப்பிட்டார்.
டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இவர் கைது செய்யப்பட்டது சர்வதேச பொலிஸாரினால் வெளியிடப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலுக்கு அமையவே என பொலிஸ் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தனது கட்சிக்காரருக்கு எதிராக இருந்த குறித்த போதைப்பொருள் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருப்பதால், அந்தச் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
தற்போது அவருக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் மற்றும் கொக்கேய்ன் கடத்தல் தொடர்பான இரண்டு வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளதால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரைத் தடுத்து வைப்பதற்கு எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையோ அல்லது சான்றுகளோ இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்தச் சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுக்கு மேலதிகமாகச் சட்டவிரோத ஆயுதக் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளதாக விசாரணைப் பிரிவினருக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறினார்.
தீவிரவாத அமைப்புகளுடன் இவர் தொடர்பில் இருந்தாரா என்பது குறித்தும் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதால், முன்வைக்கப்பட்ட நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்தத் தடுப்புக் காவல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வலியுறுத்தினார்.
இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, சந்தேகநபருக்கு வீட்டில் இருந்து மரக்கறி உணவை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்குமாறும், சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்காக தற்போது வழங்கப்பட்டுள்ள நேரத்தை விடக் கூடுதல் வாய்ப்பை வழங்குமாறும் கோரினார்.
மேலும், சந்தேகநபருக்கும், சட்டத்தரணிகளுக்கும் இடையிலான உரையாடல்களைப் பொலிஸார் பதிவு செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
அதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், வீட்டில் இருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை சிக்கலானது என்றும், சந்தேகநபரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பொலிஸார் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
