நடிகர் பாலய்யாவின் விடியோவை பதிவிட்டு டிரம்பை ஈரான் கிண்டல்

நடிகர் பாலய்யாவின் விடியோவை பதிவிட்டு டிரம்பை ஈரான் கிண்டல் செய்துள்ளது.

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா (பாலய்யா) நடித்த சண்டைக் காட்சியை பதிவிட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஜிம்பாப்வேவில் உள்ள ஈரான் தூதரகம் கிண்டல் செய்துள்ளது.

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எட்டப்படாததால் தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. எண்ணெய் வழிப்போக்குவரத்தில் உலகளவில் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை வழக்கம்போல செயல்படாததால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன.

இதைத் தொடர்ந்து, அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெறும் இந்தப் போரானது வான்வழித் தாக்குதல்களில் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் கருத்து பரிமாறிக்கொள்வதிலும் தொடர்கிறது.

தனது பேச்சாலும் சமூக ஊடகப் பதிவாலும் ஈரானையும் ஈரான் பிரதிநிதிகளையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறார். இதற்கு ஈரானியர்கள் சற்றும் சளித்தவர்கள் அல்ல.

அண்மைக் காலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கிண்டல் செய்வதற்காக தென்னிந்திய படங்களை ஈரான் பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அக்ஷய் குமாரின் வைரல் மீம் ஒன்றைப் பயன்படுத்தி டிரம்ப்பை ஈரான் கிண்டல் செய்திருந்தது. இந்த நிலையில், தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த சண்டைக் காட்சியைப் குறிப்பிட்டு ஜிம்பாப்வேவில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்திருப்பதாவது:

ஈரானை அழிப்பதாக டிரம்ப் பேசுகிறார். ஆனால், ஈரான் பாதுகாப்பற்ற நாடு அல்ல என்பது அவருக்குத் தெரியும்.

அவர்கள் (அமெரிக்கர்கள்) சமீபகாலமாக ஹாலிவுட்டுக்கு பதிலாக பாலிவுட் (இந்தியத் திரைப்படங்கள்) பார்க்கிறார்கள் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று ஈரான் குறிப்பிட்டுள்ள பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.