மீலாதுன் நபி நிகழ்வில் சமூக சேவையாளர்கள் கௌரவிப்பு

மீலாதுன் நபி நிகழ்வில் சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.

சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் நான்காவது ஆண்டு நிறைவையும் ஹிஜ்ரி 1448 மீலாதுன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்வையும் முன்னிட்டு, பல்வேறு சமூகப் பணிகளுக்கு பங்களிப்பு செய்த ஆறு முக்கியஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (28) நடைபெறுகிறது.

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை மக்கள் கேட்போர் மண்டபத்தில் மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் ஐ. ஜாபீர் தலைமைதாங்குகிறார்.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் அல் ஹாபிழ் எம். எஸ். எம். றஸான் (நளிமி) பிரதம அதிதியாகவும் கல்முனை ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தவிசாளர் டாக்டர் முஹம்மத் றிஸான் ஜெமீல் விசேட அதிதியாகவும் கலந்து கொள்கின்றனர்.

சாய்ந்தமருது கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் ஜனாபா அஸ்மா அப்துல் மலிக் (SLEAS) கௌரவ அதிதியாக பங்கேற்கிறார்.

இந்நிகழ்வில் விசேட பேச்சாளராக உஸ்தாத் மௌலவி ஏ.ஆர். ஸபா முஹம்மது உரையாற்றுகிறார். இவர் தாறுஸ்ஸஃபா சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர், தாறுஸ்ஸஃபா டிஜிடல் மீடியா நெட்வேர்க்கின் தவிசாளர், பாத்திமத்துஸ் ஸஹ்ரா கல்லூரி அதிபர், முஹையதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலின் பிரதித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வருகின்றார்.

அமைப்பின் கடந்த நான்கு வருடகால சமூக சேவை நடவடிக்கைகள், சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், அதன் சேவை வரலாறு மற்றும் அறிமுகக் காணொளி நிகழ்வில் காட்சிப்படுத்தப்படும்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் அன்பளிப்புப் பொருள்களும் வழங்கப்படுகின்றன.

அத்துடன், அமைப்பின் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்த ஆறு முக்கியஸ்தர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கி கௌரவிக்கப்படுவதாக தலைவர் ஐ. ஜாபீர் தெரிவித்துள்ளார்.

மின்மினி மின்ஹா 27-08-2026