குளியாப்பிட்டியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் தியதொரை, மாதரவத்தை பிரதேசத்தில், சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிட்டபட்டுள்ளது.
அப்போது சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக, வலானை ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வலானை ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையைத் தொடர்ந்து, இன்று (31) விசேட பொலிஸ் குழுவினால் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முற்றுகையின் போது, சட்டவிரோத மதுபான காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் 7,560,000 மில்லி லீற்றர் கோடா அடங்கிய 40 பீப்பாய்கள், 187,500 மில்லி லீற்றர் கசிப்பு அடங்கிய 250 போத்தல்கள், 07 சுருள்களைக் கொண்ட 02 செப்புச் சுருள்கள், 02 எரிவாயு அடுப்புகள்,12.5 கிலோகிராம் கொண்ட 04 எரிவாயு சிலிண்டர்கள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
