கிராம சேவை உத்தியோகத்தர்கள் சனிக்கிழமைகளில் பணியாற்றார்!

கிராம சேவை உத்தியோகத்தர்கள் சனிக்கிழமைகளில் பணியாற்றாதிருக்கத் தீர்மானித்துள்ளனர்.

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் ஆரம்பித்திருந்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்கத் தவறியதாகக் கூறி,நேற்று (15) முதல் சனிக்கிழமைகளில் பணிகளில் ஈடுபடுவதிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் பணிகளில் ஈடுபடுவதிலிருந்து விலகுவதற்குக் கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளதாக அந்தச் சங்கத்தின் பொதுச்செயலாளர் நெவில் விஜேரத்தினா தெரிவித்தார்.

பயணச் செலவுக் கொடுப்பனவை அதிகரித்தல், பட்டப்படிப்பை குறைந்தபட்ச கல்வித் தகுதியாக மாற்றுதல், கமமன்பில குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை உள்ளிட்ட அரச விடுமுறை நாள்களில் பணியாற்றுவதற்காக ஒரு நாள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10ஆம் 11ஆம் திகதிகளில் கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து பணிக்குச் சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எனினும், அந்த இரண்டு நாள் தொழிற்சங்கப் பொராட்டத்தைத் தொடர்ந்து அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.தமது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வையும் வழங்கத் தவறியுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே மறு அறிவித்தல் வரை சனிக்கிழமைகளில் பணிகளில் ஈடுபடுவதிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ். ஆர். இரவீந்திரன்