முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்

கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு,கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள்,பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்று (31) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன்:

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆண்டுகளில் 2,262.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இன்னமும் 1,493.2 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. இதில் வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவில் அமைந்துள்ள காணிகள் மிக முக்கியமானவையாகும்” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய கூட்டுறவுப் பிரதியமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க:

நாட்டில் மீண்டும் போர் ஏற்படாது. இருப்பினும், பாதாள உலகக் குழுக்களின் கட்டுப்பாடு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய சில முக்கிய விடயங்கள் உள்ளன.

இவை குறித்தும் கவனம் செலுத்தி, மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்குரிய காணிகளை மீள வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது” என்றார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த ஆளுநர் நா.வேதநாயகன்:

நான் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில், தற்போதைய பாதுகாப்பு பிரதியமைச்சர் இங்குப் படைப்பிரிவுத் தளபதியாக பணியாற்றினார்.

அன்றைய காலகட்டத்தில் மீள்குடியமர்வுக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

அன்று அவருடன் கலந்துரையாடி மக்களின் மீள்குடியமர்வு, காணிகள் விடுவிப்பைச் சாத்தியமாக்கியிருந்தோம். தற்போதும் இத்தகைய கலந்துரையாடல்கள் ஊடாக கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படலாம் என நம்புகின்றேன்.

தேசியப் பாதுகாப்பு மற்றும் மக்களின் கோரிக்கைகள் ஆகிய இரண்டும் இரு வேறு முக்கிய முனைகளாகும். இவ்விரண்டுக்கும் இடையே சீரான சமநிலையைப் பேணி நாம் தீர்வை எட்ட வேண்டியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்.

எனவே, நாம் ஆக்கப்பூர்வமாகக் கலந்துரையாடிச் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர:

தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும் முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்படும் அசாதாரண மற்றும் இடர் நிலைமைகளின் போது பொலிஸாருடன் இணைந்து முப்படையினர் களப்பணியாற்றுகின்றனர்.

போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

எமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.

பேஸ்புக்கில் எம்மைப் பின்தொடர