மட்டக்களப்பு மக்கள் பிரச்சினைகள் அபிவிருத்திக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கைத்தொழில்,தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இன்று (31) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி,மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கருத்துகளை முன்வைத்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.


அதேவேளை, அண்மையில் கிழக்கு மாகாண பிரதம செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள கு. குணநாதன் அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றப் பயணத்தில் அவரது பங்களிப்பு சிறப்புற அமையவும் வாழ்த்து தெரிவித்தார்.
கூட்டத்தின் போது, மாவட்டத்தில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து விரிவாக மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவற்றை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மேலும், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்டன.
ஒதுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளரினால், வாழைச்சேனை காகித ஆலை தொடர்பான விடயம் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, அந்தத் தொழிற்சாலை தொடர்பில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது மக்களின் விருப்பத்திற்கு முரணான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது என உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, ஞானமுத்து ஶ்ரீநேசன், இரா. சாணக்கியன், இ. சிறிநாத், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கு. குணநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள்,அரச அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களது பிரதேசங்களின் முக்கிய பிரச்சினைகள் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பான கருத்துகளை முன்வைத்தனர்.
-ஊடகப்பிரிவு
