சொத்துகள், பொறுப்புகள் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக 2026 ஜூலை 7 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை அபராதமின்றி நீட்டிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த அறிக்கைகளை 2026 ஜூன் 30 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மையப்படுத்தப்பட்ட மின்னணு அறிக்கை சமர்ப்பிப்பு அமைப்பில் அதிகளவான பயனர்கள் ஒரே நேரத்தில் உள்நுழைந்ததால் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனால், ஏற்கனவே மின்னணு அமைப்பில் வெற்றிகரமாக பதிவு செய்திருந்தும் அறிக்கையை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதிவு செயல்முறையை நிறைவு செய்ய முடியாதவர்களுக்கும் ஜூலை 7 வரை அபராதமின்றி அறிக்கை சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 7 ஆம் திகதிக்குப் பின்னரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். எனினும், அவ்வாறு தாமதமாக சமர்ப்பிப்பவர்கள் சட்டப்படி அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியவர்கள்
2023 ஆம் ஆண்டின் ஊழல் எதிர்ப்பு சட்டம் இலக்கம் 09-ன் 80 ஆம் பிரிவின் கீழ் பின்வரும் தரப்பினரும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜனாதிபதி, பிரதமர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மாகாண ஆளுநர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்
அரசின் மூத்த அதிகாரிகள்
அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் நிர்வாக அதிகாரிகள்
இலங்கை மத்திய வங்கி மற்றும் அரச வங்கிகளின் மூத்த அதிகாரிகள்
ஆயுதப்படை அதிகாரிகள்
மேலும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு அதிகாரிகள் மற்றும் பொது சேவைப் பணியாளர்கள்.
அறிக்கையில் சேர்க்க வேண்டிய தகவல்கள்
மின்னணு அமைப்பின் மூலம் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் பின்வரும் விவரங்கள் இடம்பெற வேண்டும்.
வருமானம்
நிலையான சொத்துக்கள்
வாகனங்கள்
நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்கள்
காப்புரிமைகள் மற்றும் வணிகமயமாக்கக்கூடிய சொத்துக்கள்
வங்கி சேமிப்புகள், கையிருப்பு பணம் மற்றும் பிற நிதிச் சொத்துக்கள்
முதலீடுகள்
முக்கிய செலவுகள்
கடன்கள் மற்றும் பிற பொறுப்புகள்
உறுதிமொழி அறிக்கை பொதுமக்களும் பார்வையிடலாம்
ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட உயர்மட்ட அரச அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கைகள் பொதுமக்கள் பார்வையிடக்கூடிய வகையில் இணையத்தில் வெளியிடப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தாமதித்தால் சட்ட நடவடிக்கை
அறிக்கையை குறிப்பிட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிதாக இணைக்கப்பட்ட பிரிவுகள்
இந்த ஆண்டு முதல் பின்வரும் தரப்பினரும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியவர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தொழிற்சங்க நிர்வாகிகள்
பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகளின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழு உறுப்பினர்கள்
உரிமம் பெற்ற ஊடக நிறுவனங்களின் பொறுப்பாளர்கள்
விளையாட்டு சங்க அதிகாரிகள்
அரச மற்றும் மாகாண அரச சேவைகளின் அனைத்து நிர்வாகத் தர அதிகாரிகள்
சுங்கச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுங்க முகவர்கள்
உதவி பெற சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை தொடர்பான மேலதிக தகவல்கள் அல்லது தொழில்நுட்ப உதவிக்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் 1954, 076 701 1954 அல்லது 011 258 7287 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளலாம்.
எஸ். ஆர். இரவீந்திரன்
