போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான தேசிய செயற்திட்டம் அரசாங்க அதிபரினால் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதனை வலுப்படுத்தும் முகமாக பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையமும் மாவட்ட செயலகமும் இணைத்து போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான தேசிய செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத் தப்படவுள்ளதை முன்னிட்டு ஆரம்ப நிகழ்வு பிரம்ம குமாரிகளின் மட்டக்களப்பு நிலைய பொறுப்பாளர் சகோதரர் சுரேஸ் அவர்களின் தலைமையில் கல்லடி கடற்கரையில் நேற்று மாலை இடம் பெற்றது.

இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த தெய்வீக சகோதரர் சார்லி ஹொக் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் போதைப்பொருள் விழிப்புணர்வுக்கான பிரத்தியோகப் பாடல் வெளியீடு சகோதரர் சார்லி ஹொக் அவர்களினால் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது.

“மனம் எவ்வாறோ, நாமும் அவ்வாறே” என்ற தலைப்பை அடிப்படையாக கொண்டு
“செழிப்பான மனதின் மூலம் போதைப்பாவனையிலிருந்து பாதுகாப்பாக இருப்போம் ” எனும் தொனிப்பொருளினூடாக பிரம்மகுமாரிகள் இராஜ யோக நிலையத்தினால் 18 மாத காலத்தினுள் 1 மில்லியன் மக்களை நேரடியாகச் சந்தித்து போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தேசிய செயற்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இதன் போது போதைப்பொருள் விழிப்புணர்வு பதாதைகள் உத்தியோக பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



எஸ். வரதராஜன்
