பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 09 மாத சிறைத்தண்டனையைக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது.
இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதால், கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாதம் சிறைத்தண்டனை விதித்திருந்தது.
இந்தச் சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தண்டனையை உறுதிசெய்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகக் கூறி, பொலிஸாரால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைகளின் பின்னர், இந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத் தண்டனையை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
