தென் கொரியாவின் முன்னாள் நீதி அமைச்சருக்கு 25 ஆண்டு சிறை!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் ஆட்சிக்கவிழ்ப்புச் சதி முயற்சிக்கு துணையாகச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நீதியமைச்சர் பாக் சுங்-ஜேவுக்கு சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று (22) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024 டிசம்பர் மாதத்தில், ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென இராணுவச் சட்டத்தை அறிவித்திருந்தார். எனினும், அதற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாகக் கூடி வாக்களித்ததையடுத்து, அந்த உத்தரவு வெறும் 6 மணித்தியாலங்களுக்குள் இரத்து செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாகச் செயல்பட்டு, ஆட்சிக்கவிழ்ப்புச் சதியில் பங்கேற்றதாக முன்னாள் நீதியமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின்போது, இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஆரம்ப கட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிரான முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டால் அவர்களை அடைக்க சிறைச்சாலைகளில் இடவசதி தொடர்பாக பாக் சுங்-ஜே ஆய்வு மேற்கொண்டதாக அரச தரப்பு நிரூபித்தது.

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சட்டத்தையே அரசியல் சதிக்கான கருவியாக மாற்றியுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டதுடன், அரச தரப்பு கோரிய 20 ஆண்டுகளை விட அதிகமாக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.