15 வயது மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து, வீடியோ வெளியிட்ட மாணவன், அதிபர், பிரதி அதிபர் உட்பட அனைவரும் கைதுசெய்யப்பட்ட சம்பவமொன்று அம்பலாந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும், 15 வயதுடைய மாணவி ஒருவர், கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை, மறைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில், அந்தப் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்,சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பாடசாலை மாணவர் ஆகியோர், அம்பலாந்தோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காவல்துறையினரின் விசாரணைகளின்படி, கடந்த மே மாதம் 21ஆம் திகதி, அல்லது அதற்கு நெருங்கிய ஒரு நாளில், சம்பந்தப்பட்ட பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது, இந்தக் குற்றச்செயல் நடந்துள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக, வேறு ஒரு பாடசாலையிலிருந்து வந்திருந்த 15 வயதுடைய மாணவன் ஒருவன், பாடசாலைக் கட்டடங்களுக்கு இடையே அமைந்திருந்த, மறைவான இடமொன்றில் வைத்து, இந்தச் சிறுமியை, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
மிகவும் பாரதூரமான விடயம் என்னவென்றால், இந்தத் துஷ்பிரயோகச் சம்பவம், கைப்பேசி மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டு, பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, அம்பலாந்தோட்டை காவல்துறை அதிகாரிகளின் குழுவொன்று, இது குறித்த விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தற்போது, மருத்துவ அறிக்கை பெறுவதற்காக, பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்கள் வரும் நாள்களில் கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
கெளசல்யா
