இந்திய அரசின் தடையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் புதன்கிழமை (ஜூன் 17) வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் முறைகேடு செய்யப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, டெலிகிராம் செயலிக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை தற்காலிகத் தடைவிதித்தது.
டெலிகிராமுக்குத் தடைவிதிப்பதன் மூலம் வினாத்தாள் கசிவை எந்த அளவுக்குத் தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய டெலிகிராம் நிறுவனர் பாவெல் டுரோவ், இது வினாத்தாள்களைக் கசியவிட்டவர்களுக்கான தண்டனை அல்ல, மாறாக 150 மில்லியன் பயனாளர்களுக்கான தண்டனை என்று கூறியுள்ளார்.
ஜூன் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறுதேர்வில் பங்கேற்கும் மாணவர்களை ஏமாற்றி, மோசடி செய்ய அத்தளம் திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டதாகக் கல்வி அமைச்சின் தேசிய தேர்வு முகமை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு இத்தகைய தடை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. அத்தடை ஜூன் 22 வரை நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள்கள் கசிந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறவுள்ளது. மறுதேர்வை சுமூகமாக நடத்த விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையும் ஒன்று.
வினாத்தாள் கசிவினால் கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் வெடித்தன.
