சிறு தேயிலைத் தோட்டங்களின் பிரச்சினைக்குத் தீர்வு

இரத்தினபுரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தியையும் அதனுடன் தொடர்புடைய தொழிற்றுறையையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடல், தோட்டக் கைத்தொழில்,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நேற்று (15.06.2026) இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் தேயிலைக் கொழுந்து சேகரிப்பாளர்கள், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள்,தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களும் கலந்துகொண்டு, தாங்கள் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள்,அவற்றிற்கான பரிந்துரைகள், கருத்துகளை முன்வைத்தனர்.

கலந்துரையாடலின் போது தற்போதைய தேயிலை விலை வீழ்ச்சி, உர விலை அதிகரிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பாதகமான காலநிலை காரணமாக ஏற்படும் விளைச்சல் இழப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், அரசாங்கம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ள “தேயிலை கிராமங்கள்” (Tea Villages) திட்டத்தின் ஊடாக சிறு தேயிலை விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட தேயிலைப் பொருட்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குதல் குறித்து பிரதி அமைச்சர் விளக்கமளித்தார்.

தேயிலைச் செய்கைக்குத் தேவையான உர மானியத்தை விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கும் நடைமுறையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், மழைப்பொழிவு குறைதல் மற்றும் வறட்சி போன்ற பாதகமான காலநிலைச் சூழல்களை எதிர்கொள்ள, தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாக முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை, தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கைத் தேயிலைச் சபையை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் கலந்துகொண்டு, தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், “இரத்தினபுரியின் தேயிலைத் தொழில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்கி, நிலையான தேயிலைத் தொழில்துறையை உருவாக்குவதே எமது இலக்காகும். உங்களின் அனைத்து யோசனைகளும் அரசின் கொள்கை வடிவமைப்பில் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட தேயிலைத் தொழிலுக்கு புதிய எழுச்சியை வழங்கும் நோக்கில், இக்கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எஸ். ஆர். இரவீந்திரன்